காட்பாடி அரசுப்பள்ளி ஆசிரியையிடம் ரூ.2 கோடி மோசடி

காட்பாடியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியையிடம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மற்றொரு அரசுப்பள்ளி ஆசிரியை உள்பட 4 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-10-21 13:38 GMT
வேலூர்

காட்பாடியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியையிடம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மற்றொரு அரசுப்பள்ளி ஆசிரியை உள்பட 4 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியை புகார் மனு

காட்பாடி திருநகரை சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது 49). இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனக்கு வேலூர் கொணவட்டம் காமராஜர் தெருவை சேர்ந்த அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் மகேஸ்வரி என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து நடந்த சந்திப்புகளில் அவருடைய குடும்பத்தினரும் எனக்கு பழக்கமானார்கள். அவர்களிடம் நட்பாக பழகி வந்த நிலையில் குடும்பசெலவு உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்காக பணம் தேவை என்று மகேஸ்வரி குடும்பத்தினர் கேட்டனர்.
ரூ.2 கோடி மோசடி

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை பல்வேறு தவணைகளில் எனது குடும்பத்தினர், நண்பர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் பெற்று ரூ.2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் கடனாக கொடுத்தேன். இந்த நிலையில் எனது பணத்தை திருப்பி தரும்படி அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பணத்தை கேட்டால் தரமறுப்பதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுகிறார்கள்.

 எனவே மகேஸ்வரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா அரசுப்பள்ளி ஆசிரியை மகேஸ்வரி, அவருடைய கணவர் தர்மலிங்கம், மகள்கள் கிருத்திகா, பூபனா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் செய்திகள்