பலகாரங்களை வைத்து விற்பனை
தீபாவளி பண்டிகைக்கு தற்காலிகமாக இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம், பதிவு பெற வேண்டும்.
திருப்பூர்
தீபாவளி பண்டிகைக்கு தற்காலிகமாக இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம், பதிவு பெற வேண்டும். மேலும் பலகாரங்களை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.
கார வகைகள் தயாரிப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள், சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். அதன்படி, இனிப்பு, கார வகைகள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் மைதா, நெய், எண்ணெய், சர்க்கரை, வனஸ்பதி உள்ளிட்டவை தரமானதாக இருக்க வேண்டும். இனிப்பு, கார வகைகள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் பொட்டலம், டின்களின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரி, பேட்ச் எண் ஆகிய விவரங்களை லேபிளில் இடம்பெற்று இருக்க வேண்டும்.
பதிவு, உரிமம் அவசியம்
ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. கண்ணாடி பெட்டிக்குள் இனிப்பு, கார வகைகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும். பால் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத இனிப்பு வகைகளை தனித்தனியாக விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக வண்ணம் சேர்க்கக்கூடாது. இனிப்பு மற்றும் கார வகைகளின் பொட்டலங்கள் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரி கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகளை தற்காலிகமாக தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் மற்றும் பதிவு பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு பெறாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் உணவுப்பொருட்கள் விற்பனைக்கு வழங்கும் ரசீதில் உரிமம், பதிவு எண்ணை அச்சிட வேண்டும். ஏற்கனவே பதிவு, உரிமம் பெற்றிருந்தாலும் புதுப்பிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-