தர்மபுரி அரூர் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ரூ310 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
தர்மபுரி மற்றும் அரூர் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ரூ310 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மற்றும் அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ரூ.3.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
தீபாவளி சிறப்பு விற்பனை
தர்மபுரி நாச்சியப்ப கவுண்டர் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் புதிய ரக பட்டு சேலைகளை பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் திவ்யதர்சினி கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சீபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டுப்புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு ரக ஜவுளிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை இலக்கு
தர்மபுரி மற்றும் அரூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களிலும் இந்த நிலையங்கள் செயல்படும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள 2 விற்பனை நிலையங்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.3.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. தர்மபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு விற்பனை நிலையத்திற்கு ரூ.2.70 கோடியும், அரூர் விற்பனை நிலையத்திற்கு ரூ.40 லட்சமும் விற்பனை இலக்கு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இந்த 2 விற்பனை நிலையங்களிலும் ரூ.1 கோடியே 9 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான பட்டு ரகங்கள் விற்பனையாகி உள்ளது. இந்த விற்பனை நிலையங்களில் அனைத்து வாடிக்கையாளர்கள் கனவு நனவு திட்டம் என்ற மாதாந்திர தவணை திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த விற்பனை சலுகைகளை பெற்று பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜராஜன், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் கோபால், துணை மண்டல மேலாளர் சுப்பிரமணியன், விற்பனை மேலாளர்கள் வனிதா, சுதாகர், ஈஸ்வரமூர்த்தி, ரக மேலாளர் பிரதீப் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.