ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்
நெல்லை:
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாவட்டத்தில் 204 பஞ்சாயத்து தலைவர்கள், 1,731 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதில் 6 பஞ்சாயத்து தலைவர்களும், 378 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 9 பஞ்சாயத்து யூனியன்களில் 122 ஒன்றிய கவுன்சிலர்களும், 12 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இதைப்போல் தென்காசி மாவட்டத்தில் 221 பஞ்சாயத்து தலைவர்கள், 1,905 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 6 பஞ்சாயத்து தலைவர்களும், 400 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 10 யூனியன்களில் 144 ஒன்றிய கவுன்சிலர்கள், 14 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2 மாவட்ட பஞ்சாயத்து தலைவர், 2 துணை தலைவர், 19 பஞ்சாயத்து யூனியன் தலைவர், 19 துணை தலைவர், 425 பஞ்சாயத்து துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.