சங்கரன்ேகாவிலில் தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தால் பரபரப்பு
சங்கரன்ேகாவிலில் தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் யூனியன் கவுன்சிலர் வேட்பாளர்களாக போட்டியிட்டு வென்றவர்கள் நேற்று யூனியன் அலுவலகத்தில் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம் உள்ள 17 உறுப்பினர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த 12 பேரும், அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவரும், சுயேச்சைகள் 2 பேரும் வென்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேர் தாமதமாக வந்தனர்.
இதற்கிடையே மற்ற உறுப்பினர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி கலெக்டர் ஹஸ்ரத் பேகம் முன்னிலையில் பதவியேற்றனர். பின்னர் தாமதமாக வந்த தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேரும், ‘நாங்கள் வருவதற்குள் எப்படி பதவியேற்பு விழா நடத்தலாம், எங்களை ஏன் அழைக்கவில்லை’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களிடம் இருந்த சான்றிதழ் நகலையும் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உதவி கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேரும் யூனியன் அலுவலக கூட்டரங்கிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சுமார் 2 மணி நேரம் கழித்து பதவியேற்று கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.