பஞ்சாயத்து தலைவராக பதவியேற்ற 22 வயது என்ஜினீயரிங் மாணவி-90 வயது மூதாட்டி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் 22 வயது என்ஜினீயரிங் மாணவியும், 90 வயது மூதாட்டியும் பொறுப்பேற்று கொண்டனர்.

Update: 2021-10-20 21:26 GMT
நெல்லை:
நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் 12-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 
இதில் தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு லட்சுமியூரைச் சேர்ந்த ரவிசுப்பிரமணியன் மகள் முதுகலை என்ஜினீயரிங் மாணவியான சாருகலா (வயது 22) வெற்றி பெற்றார். அவர் 3,336 வாக்குகள் பெற்றார்.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று காலையில் பதவியேற்பு விழா நடந்தது.
இதில் காலை 10 மணி அளவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்குமார் முன்னிலையில் பஞ்சாயத்து தலைவராக சாருகலா பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் அவருக்கு பொன்னாடை அணிவித்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் வெளியே வந்த பஞ்சாயத்து தலைவர் சாருகலா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் பஞ்சாயத்து தலைவராக பொறுப்ேபற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முதல் கடமையாக வெங்கடாம்பட்டி பஞ்சாயத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பேன். நான் ஓட்டு கேட்க செல்லும்போது ஏராளமான இடங்களில் கருவேல மரங்கள் இருந்தன. அதை அகற்றிவிட்டு நாட்டு மரங்களை நடுவதற்கு முயற்சி செய்வேன். எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

90 வயது மூதாட்டி- இளம் பட்டதாரி

இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து சிவந்திபட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவராக பெருமாத்தாள் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏராளமானவர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை யூனியன் மேலபுத்தநேரி பஞ்சாயத்து தலைவராக இளம் பட்டதாரியான மனோஜ்குமார் (22) என்பவர் வெற்றி பெற்றார். இவரும் நேற்று பஞ்சாயத்து தலைவராக மேலபுத்தநேரி பஞ்சாயத்து அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மனோஜ்குமாரின் தாய் பகவதி கண்ணன் பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்