கலபுரகி, விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.52 ஆக பதிவானது

கலபுரகி மற்றும் விஜயாப்புராவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தார்கள். ரிக்டர் அளவில் இது 6.52 ஆக பதிவாகி இருந்தது.

Update: 2021-10-20 21:11 GMT
பெங்களூரு: கலபுரகி மற்றும் விஜயாப்புராவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தார்கள். ரிக்டர் அளவில் இது 6.52 ஆக பதிவாகி இருந்தது.

ரூ.50 ஆயிரம் நிதி உதவி

கலபுரகி மற்றும் விஜயாப்புரா மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த மாவட்டங்களில் இதுவரை 16 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் குலுங்குவதாலும், வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாலும் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இதையடுத்து, ஐதராபாத்தை சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் அங்கு வந்து ஆய்வு நடத்தினார்கள்.

அதே நேரத்தில் கலபுரகி மாவட்டம் கடிகேஷ்வராவில் நிலநடுக்கம் காரணமாக 20 வீடுகள் சேதம் அடைந்திருந்தது. இதையடுத்து, 20 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் நிலநடுக்கம்

இந்த நிலையில், கலபுரகி மாவட்டம் கடிகேஷ்வராவில் நேற்று மீண்டும் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கடிகேஷ்வராவில் உள்ள கிராமங்களில் வீடுகள் குலுங்கியது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். தகவல் அறிந்ததும் கடிகேஷ்வராவுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடிகேஷ்வராவில் நேற்று முதல் தடவை நிலநடுக்கம் ஏற்பட்ட போது ரிக்டர் அளவில் 4.31 ஆகவும், 2-வது முறை நிலநடுக்கம் ஏற்பட்ட போது 6.52 ஆகவும் பதிவாகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுபோல், விஜயாப்புரா மாவட்டம் திகோட்டாவிலும் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், வீடுகள் குலுங்கியது. கலபுரகி, விஜயாப்புராவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்