வீடு புகுந்து பெண் குத்திக் கொலை; கள்ளத்தொடர்பு காரணமா? போலீஸ் விசாரணை

பெங்களூருவில் வீடு புகுந்து பெண்ணை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-20 21:10 GMT
பெங்களூரு: பெங்களூருவில் வீடு புகுந்து பெண்ணை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் இருந்து வந்த புகை

பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யாரூப் நகர், 10-வது கிராசில் வசித்து வருபவர் லாலுகான். இவரது மனைவி அப்ரீனா கானம் (வயது 28). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அப்ரீனா கானம் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தாா். நேற்று முன்தினம் காலையில் வேலைக்காக டிம்பர் யார்டுவுக்கு லாலுகான் சென்றிருந்தார். அப்போது தனது 2 குழந்தைகளையும் பக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அப்ரீனா கானம் அனுப்பி வைத்திருந்தார்.

இதனால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அப்ரீனா கானம் வீட்டில் இருந்து புகை வெளியேறிய வண்ணம் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அதே பகுதியில் வசிக்கும் அப்ரீனா கானத்தின் சகோதரருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றனர்.

பெண் குத்திக் கொலை

அப்போது அப்ரீனா கானம் அணிந்திருந்த ஆடையில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த தீயை அணைத்தனர். மற்ற பகுதிகளுக்கும் தீ பரவாமல் பார்த்து கொண்டனர். அதே நேரத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் அப்ரீனா கானம் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது. இதுபற்றி பனசங்கரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அப்ரீனா கானத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

தகவல் அறிந்ததும் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டேவும், அங்கு சென்று விசாரித்தாா். அப்போது வீட்டில் ரத்த கறை படிந்த கத்திரிகோல் மற்றும் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்ரீனா கானத்தை மா்மநபர்கள் கத்திரிகோல் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

கள்ளத்தொடர்பு காரணமா?

மேலும் கொலையை மறைக்க ஒரு துணியில் தீயை வைத்து, எரிந்து கொண்டு இருக்கும் அந்த துணியை அப்ரீனா கானத்தின் உடலில் வீசியதால், அவரது உடலிலும் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. அதாவது கொலையை மறைக்கவும், அப்ரீனா கானம் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பது போல் இருப்பதற்காகவும் துணியில் தீயை வைத்து, அவரது உடலில் மர்மநபர்கள் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் அப்ரீனா கானத்திற்கு நன்கு தெரிந்த நபர்களே, அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.ஏற்கனவே லாலுகானுவுக்கும், அப்ரீனா கானத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.மேலும் அப்ரீனா கானத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு லாலுகான் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால்  கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

முக்கிய துப்பு கிடைத்துள்ளது

இந்த நிலையில், கொலையாளிகள் பற்றி முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும், கூடிய விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகி விட்ட மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அத்துடன் லாலுகானுவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்