குண்டும் குழியுமான ரோடு
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரையில் இருந்து சீரடி கிராமத்துக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.. குறிப்பாக இரவு நேரங்களில் மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்ச்செல்வன், தாமரைக்கரை.
பள்ளிக்கூடம் அருகில் குப்பை
கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் இருந்து பச்சைமலைக்கு ஒரு கட் ரோடு செல்கிறது. அந்த ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த குப்பை கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், பச்சைமலை.
அங்கன்வாடி மையத்தில் மழைநீர் (படம்)
மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி காலிங்கராயன்பாளையம் பழையூரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் முன்பு மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பழையூர்.
ரோட்டில் செல்லும் கழிவுநீர்
அம்மாபேட்டை ஒன்றியம், சிங்கம்பேட்டை ஊராட்சி 1-வது வார்டில் பெருமாள் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாய் புதர் மண்டி கிடக்கிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாக்கடை கால்வாயின் கழிவுநீர் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால் வீதியில் நடக்க முடியவில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பி.முருகேசன், சிங்கம்பேட்டை.
ரோடு சீரமைக்கப்படுமா?
ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் செல்லும் ரோடு பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டது. ஆனால் குழிகள் சரிவர மூடப்படவில்லை. இதனால் ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பஸ், லாரி, கார் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. ஈரோட்டில் உள்ள முக்கியமான ரோடுகளில் ஒன்றான இந்த ரோடு சீரமைக்கப்படுமா? என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
ராஜா, கருங்கல்பாளையம்.
தேங்கும் கழிவுநீர்
ஈரோடு பெருந்துறைரோடு குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வெளியேறி தேங்கி நிற்கிறது. பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி, கழிவுநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், குமலன்குட்டை
வீணாகும் குடிநீர்
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான கருங்கல்பாளையம் ஓம் காளியம்மன் கோவிலுக்கும், சகன் வீதிக்கும் நடுவே கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி காவிரி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர் குழாய் உடைப்பு உடனே சரிசெய்யப்படுமா?
பொதுமக்கள், கருங்கல்பாளையம்.