கோவில்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்
கோவில்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடந்தது.
அரியலூர்:
அன்னாபிஷேகம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் நகரில் உள்ள கைலாசநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில், அரசு நிலையிட்டான் ஏரி சிவன் கோவில், ெரயிலடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் அரிசி சாதம் சமைக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு சாற்றப்பட்டது. மேலும் பழம், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்களின் சிவ, சிவா... கோஷங்களுடன் கைலாய வாத்தியம் முழங்க சிவலிங்கத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.
தா.பழூர், திருமானூர்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விஸ்வநாதருக்கு பக்தர்களிடம் இருந்து திரட்டப்பட்ட அரிசியைக் கொண்டு சாதம் வடித்து அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு திருமுறைகள் பாராயணம் செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் அன்னாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதேபோல் காரைக்குறிச்சி சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மார்க்க சகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிவபெருமான் அன்னக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சுமார் 5 மூட்டை அரிசியை சாதமாக வடித்து அதனை லிங்கத்தின் மேல் சாற்றப்பட்டது. அதன்மேல் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் லிங்கத்தின் மேல் அலங்கரிக்கப்பட்ட அன்னத்தை கலைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமிருந்த அன்னம் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
குழந்தை பாக்கியம் வேண்டி...
இந்த பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம். இதனால் குழந்தை பாக்கியம் வேண்டும் என வேண்டிக்கொண்ட பெண்கள் அவர்களது முந்தானையில் பிரசாதத்தை வாங்கி உண்டனர். இதனையடுத்து லிங்கத்திற்கு பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டிமடம்
ஆண்டிமடம் விளந்தையில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நேற்று மதியம் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாசனம் நடைபெற்றது. மேலும் அகத்தீஸ்வரருக்கு சங்கினால் பால் அபிஷேகமும், திரவிய அபிஷேகமும் செய்யப்பட்டு அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று சொல்லக்கூடிய வகையில் அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மலர்கள், காய்கறிகள், பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6 மணி அளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஆண்டிமடம் விளந்தை மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.