‘நீட் தேர்வுக்கு தடை’ என வாக்குறுதி அளிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு, தி.மு.க.வுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

‘நீட் தேர்வுக்கு தடை விதிக்கப்படும்’ என வாக்குறுதி அளிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு, தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-10-20 19:47 GMT
மதுரை, 

‘நீட் தேர்வுக்கு தடை விதிக்கப்படும்’ என வாக்குறுதி அளிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு, தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி

ராமேசுவரத்தை சேர்ந்த வெற்றிவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2013-ம் ஆண்டில் 7,17,127 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் 13,26,725 மாணவர்களும், 2019-ம் ஆண்டில் 15,19,375 மாணவர்களும், 2020-ம் ஆண்டில் 15,97,435 மாணவர்களும் நீட் தேர்வை எழுதியுள்ளனர். இதன்மூலம் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது தெளிவாகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முழுமையாக தடை விதிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.

மாணவர்கள் குழப்பம்

நீட் தேர்வு நடத்த எந்த தடையும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தபோதும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்பு, நீட் தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடைபெற்றது. நீட் தேர்வு தடை செய்யப்படும் என அளித்த வாக்குறுதியின் காரணமாக இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுக்கு மாணவர்கள் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை.
இழப்பீடு
நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருந்தனர். மாணவர்களின் மன குழப்பத்திற்கும், சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கும் தவறான வாக்குறுதி தான் காரணம்.
எனவே தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை கொடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவும், மனஅழுத்தத்துக்கு ஆளான மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நோட்டீஸ்

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “அரசியல் கட்சிகள் வாய்மொழியாக வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிய வழக்கில், வாக்குறுதிகளை சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நிறைவேற்ற இயலும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது" என்று வாதாடினார்.
பின்னர் இந்த வழக்கு குறித்து, தமிழக அரசு, தி.மு.க. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை நவம்பர் மாதம் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்