மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பலி

பள்ளப்பட்டியில், குடிநீர் குழாயை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2021-10-20 19:38 GMT
அரவக்குறிச்சி
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பேரூராட்சி தெற்கு மந்தை தெருவில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் குழாய் சீரமைப்பு பணி நடைபெற்றது. இந்த பணியில் அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னா கவுண்டனூரை சேர்ந்த குணசேகரன் (வயது 40), பள்ளப்பட்டியை சேர்ந்த பைசூல்(35), அரவக்குறிச்சி சேந்தமங்கலம் மேல்பாகம் ஊராட்சி செல்லிவலசை சேர்ந்த வீரக்குமார் (32), திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (25) ஆகிய 4 பேர் ஈடுபட்டனர்.
 அப்போது அவர்கள் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்து பள்ளப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவிற்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு போர்டில் போக்கஸ் லைட் கட்டி பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.
மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
 அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் பொக்லைன் ஆபரேட்டர் அஜித்குமார் போக்கஸ் லைட்டை இடம் மாற்றுவதற்காக அதனை எடுத்தபோது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் குழியில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த வீரக்குமார் மீது விழுந்தார். இதில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்