சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதப் பவுர்ணமியைெயாட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
அருப்புக்கோட்டை
ஐப்பசி மாதப் பவுர்ணமியைெயாட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
அன்னாபிஷேகம்
ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐப்பசி பவுர்ணமியான நேற்று அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலைத்துறை பாத்தியப்பட்ட சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், பழக்கலவைகள் தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதானைகள் நடைபெற்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த அன்னம் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது. அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பாலையம்பட்டி ஸ்ரீசுப்பா ஞானியார் கோவில் ஜீவசமாதியில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜையுடன் அன்னாபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிலம்புச் செல்வி செய்திருந்தார்.
பிரசாதம்
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் சர்வமங்கள வரசித்தி விநாயகர் கோவில், வைத்தியநாத சுவாமி கோவில், அன்ன விநாயகர் கோவில் மற்றும் முக்கிய கோவில்களில் அன்ன அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவகாசியில் உள்ள சிவன்கோவிலில் உள்ள லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. காலை 5 மணிக்கே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டனர். பின்னர் கோவில் முழுவதும் காய்கறி தோரணங்கள் கட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னம் மற்றும் காய்கறிகளை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
ராஜபாளையம் பழையபாளையம் பகுதியில் வணிக வைசிய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் அன்ன அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள கமலவிநாயகர் கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.