வேலூரில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது

வேலூரில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-20 18:19 GMT
வேலூர்

வேலூரில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். 

 ஆட்டோ திருட்டு

காட்பாடி தாலுகா விருதம்பட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 44), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை வேலூர் சாரதிமாளிகை அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு, நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் பிரவீன்குமார் வந்தபோது அங்கு நிறுத்தியிருந்த ஆட்டோ காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதியில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து பிரவீன்குமார் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னையை சேர்ந்தவர் கைது

இந்த நிலையில் நேற்று காலை வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலவெங்கட்ராமன் மற்றும் போலீசார் வேலூர் நேஷனல் சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் ஆவணங்களை சோதனை செய்தனர். அதில், அந்த ஆட்டோ நேற்று முன்தினம் காணாமல் போன பிரவீன்குமாருக்கு சொந்தமான ஆட்டோ என்று தெரிய வந்தது. அதையடுத்து அந்த ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் சென்னை அரும்பாக்கம் ஜெய்நகரை சேர்ந்த ரமேஷ் (44) என்பதும், அவர் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மேலும் 4 ஆட்டோக்களை திருடி, அவற்றை பல்வேறு நபர்களுக்கு விற்று பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது. 
இதையடுத்து போலீசார் திருடிய ஆட்டோக்களை விற்ற நபர்களின் பெயர், முகவரி பெற்று அந்த இடங்களுக்கு சென்று 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்