திருப்பத்தூர், ராணிப்பேட்டை,வேலூர் மாவட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2021-10-20 18:12 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

 திருப்பத்தூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் வெற்றிபெற்ற  மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 11 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றிருந்தன.

வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்புவிழா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் 12 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். ஒருவர் பதவி ஏற்கவில்லை. 

 கொரோனா தடுப்பூசி

நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அமர்குஷ்வாஹா மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி பொது மக்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வன், ஹரிஹரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜசேகர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு கலெக்டர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். மக்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க பணியாற்றிட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைவரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திட மாவட்ட குழு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தந்து, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) மரியம் ரெஜினா, மாவட்ட ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேலாயுதம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 வேலூர்

வேலூர் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன் வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 
13 தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள், காங்கிரஸ்  கவுன்சிலர் ஒருவர் என்று 14 மாவட்ட கவுன்சிலர்களும் பதவியேற்று கொண்டனர்.

மேலும் செய்திகள்