காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-10-20 17:08 GMT
கடலூர், 

பாலியல் பலாத்காரம்

காட்டுமன்னார்கோவில் அருகே வாண்டையார் இருப்பு புளியங்குடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 23). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறினார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த சிறுமியிடம் என்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதோடு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்தார். கடந்த 14.9.2019 அன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, அவரது வீட்டுக்குள் சுபாஷ் அத்துமீறி நுழைந்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.

10 ஆண்டு சிறை

அதையடுத்து பல முறை அந்த சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதையடுத்து அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியானார். இதையடுத்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு மகளிர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதற்கிடையில் அந்த சிறுமிக்கு 6.6.2020 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு டி.என்.ஏ. பரிசோதனை முடிவின் அறிக்கையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து நடந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் சுபாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இழப்பீடு

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர், அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜரானார்.

மேலும் செய்திகள்