சத்துவாச்சாரியில் பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் பள்ளி மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் புகார்கள் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன் உறுப்பினர் மகாலட்சுமி, சமூகநலத்துறை அலுவலக ஊழியர் சாந்தி மற்றும் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நந்தியாலம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று காலை பிரம்மதேசம் நாட்டேரி மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது பூர்த்தியான பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கி கொண்டனர்.
அதையடுத்து அதிகாரிகள் பள்ளி மாணவியை மீட்டு வேலூர் சின்னஅல்லாபுரத்தில் உள்ள அரசு பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் சேர்த்தனர்.