எந்திரத்தை இயக்க தெரியாத பயிற்றுனருக்கு நோட்டீஸ்; திண்டுக்கல் தொழிற் பயிற்சி நிலையத்தில் அமைச்சர் அதிரடி ஆய்வு
திண்டுக்கல் தொழிற் பயிற்சி நிலையத்தில் அதிரடியாக ஆய்வு செய்த அமைச்சர் சி.வி.கணேசன், எந்திரத்தை இயக்க தெரியாத பயிற்றுனருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தொழிற் பயிற்சி நிலையத்தில் அதிரடியாக ஆய்வு செய்த அமைச்சர் சி.வி.கணேசன், எந்திரத்தை இயக்க தெரியாத பயிற்றுனருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
தொழிற்பயிற்சி நிலையம்
திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்கள், மாணவிகளுக்கு என்று தனித்தனியாக தொழிற்பயிற்சி நிலைய கட்டிடங்கள் உள்ளன. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர், இடவசதி, ஆய்வகம், உள்கட்டமைப்பு, பயிற்சி மையம், வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டனர்.
பின்னர் மாணவ-மாணவிகளிடம் அமைச்சர் சி.வி. கணேசன் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஆய்வுக்கூடத்துக்கு சென்ற அமைச்சர்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை மாணவ-மாணவிகள் முறையாக இயக்கி வருகிறார்களா? என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதையடுத்து ஆய்வகத்தில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் இயங்கக்கூடிய ஒரு எந்திரத்தை இயக்கி காட்டுமாறு பயிற்றுனரிடம் அமைச்சர் கூறினார். ஆனால் அந்த எந்திரத்தை முறையாக இயக்க தெரியாமல் பயிற்றுனர் தடுமாறினார்.
நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
இதைப்பார்த்த அமைச்சர் சி.வி.கணேசன், பயிற்றுனரிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி தொழிற் பயிற்சி நிலைய முதல்வருக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 90 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறோம். மேலும் தமிழகத்தில் கூடுதலாக எத்தனை தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றும் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம்.
தொழில் படிப்பு படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நோக்கம். இதற்காக ‘ஸ்கில் டெவலப்மென்ட்’ என்ற புதிய துறையை முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார். இந்த துறை மூலம் மாணவ-மாணவிகளுக்கு அரசு, தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.
1 லட்சம் பேருக்கு தொழிற்கல்வி
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேல் தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது வரை 25 ஆயிரம் மாணவ-மாணவிகளே படித்து வருகின்றனர். எனவே ஒவ்வொரு தொழிற் பயிற்சி நிலையத்திலும் குறைந்தபட்சம் 1,000 பேரையாவது படிக்க வைத்து அதன் மூலம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மாணவர்களை தொழில் படிப்பு படிக்க வைப்பதே அரசின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, கலெக்டர் விசாகன், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி, வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சுப்பிரமணியன், உதவி இயக்குனர் பிரபாவதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.