தேவர்சோலை-கூடலூர் இடையே நடுவழியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்

தேவர்சோலை-கூடலூர் இடையே நடுவழியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்

Update: 2021-10-20 14:35 GMT
கூடலூர்

தேவர்சோலை-கூடலூர் இடையே அரசு பஸ் பஞ்சராகி நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பழுதடைந்த பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கூடலூர் கிளையில் இருந்து சுமார் 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர், ஊட்டிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த பழுதடைந்த பழமையான பஸ்களை போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அரசு பஸ்கள் அடிக்கடி நடுவழியில் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.  

நடுவழியில் நின்ற அரசு பஸ்

இந்த நிலையில் கூடலூரில் இருந்து தேவர்சோலை வழியாக பாட்டவயலுக்கு நேற்று அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்றது. பின்னர் அங்கு இருந்து பயணிகளை அழைத்துக்கொண்டு கூடலூர் வந்து கொண்டிருந்தது.
தேவர்சோலையில் இருந்து கூடலூர் 1-ம் மைல் பகுதியில் வந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென பஞ்சரானது. 

இதனால் வேறு வழியின்றி நடுவழியில் பஸ் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பஸ் பயணிகள் வேறு வாகனங்களில் ஏறி கூடலூர் வந்து சேர்ந்தனர். இதனால் அவர்கள் கடும் அவதியடைந்தனர். 

கடந்த 13-ந் தேதி புதன்கிழமை ஊட்டியில் இருந்து மசினகுடி இயக்கப்பட்ட அரசு பஸ் பழுதடைந்து நடுவழியில் பழுதாகி நின்றது குறிப்பிடத்தக்கது.

புதியதாக வாங்க வேண்டும்

இது குறித்து பயணிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்களில் உதிரிபாகங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பயன்பாட்டு காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து உதிரிபாகங்களை பயன்படுத்துவதால் பஸ்கள் அடிக்கடி நடுவழியில் நின்று விடுகிறது. 

எனவே பழைய பஸ்களை முறையாக பராமரிப்பு செய்து, பழுது நீக்கி இயக்க வேண்டும் அல்லது புதிய பஸ்களை மாற்ற வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்