சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருப்பூரில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
திருப்பூர்
திருப்பூரில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதுபோல் லட்சக்கணக்கான பொதுமக்கள் மாநகரில் வசித்து வருவதால், குப்பைகளை கொட்டும் வகையில் மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பலரும் குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூர் பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் இருப்பதால், சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள கட்டபொம்மன்நகர், பவானிநகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன.
சுகாதார சீர்கேடு
இந்த பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்து வருகின்றன. இதனால் குப்பை தொட்டிகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன. குப்பை தொட்டி நிறைந்தவுடன் அந்த பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகளை பலரும் கொட்டி வருகிறார்கள். தற்போது மழையும் பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பலரும் அவதியடைந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-----
படம் உள்ளது.
------