போனஸ் வழங்க வேண்டும்

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு.மாநில தலைவர் சவுந்தரராஜன் திருப்பூரில் கூறினார்.

Update: 2021-10-20 12:15 GMT
திருப்பூர்
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு.மாநில தலைவர் சவுந்தரராஜன் திருப்பூரில் கூறினார்.
20 சதவீதம் போனஸ்
சி.ஐ.டி.யு. மாநில நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
கொரோனா ஊரடங்கில் வேலையிழப்பால் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் ஒரு வருடத்துக்கு மாதம் ரூ.7,500 நிவாரண உதவித்தொகை மற்றும் உணவுப்பொருட்களை மத்திய, மாநில அரசு வழங்க வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், ஆவின், சிவில் சப்ளை போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போனஸ் 10 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. 20 சதவீதம் என்பதை 10 சதவீதமாக குறைத்தனர். இந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி அதை சரி செய்து பழைய முறைப்படி 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கத்தினரை அனுமதிக்க முடியாது என்ற கடுமையான போக்கு நிலவுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும். காங்கேயத்தில் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட 3 பெண் தொழிலாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுடன் அதற்கு உடன்படாதவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர், அமைச்சரிடம் முறையிட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதுபோல் பல உள்ளாட்சிகளில் பாலியல் தொந்தரவு இருக்கிறது. இதை அரசு கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டும்.
வீட்டு வசதி
 திருப்பூரில் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை அரசு உருவாக்கி வழங்க வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை திருப்பூரில் இல்லை. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி கண்டிப்பாக அமைக்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூரில் அதிகம் உள்ளனர். இந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இருந்து நிவாரணம் பெற முடியும். புலம்பெயர் தொழிலாளர் சட்டப்படி, தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். விசைத்தறி தொழிலில் சம்பள ஒப்பந்தம் முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் திருப்பூரில் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்த கூடாது. கொரோனாவை காரணம் காட்டி பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் இயக்க வேண்டும். 
சத்துணவு, அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு சம்பள உயர்வு குறித்து எதுவும் அறிவிப்பு இல்லை. இதில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். அரசு ஊழியர்களுக்கு போனஸ் 1 மாதத்துக்கு முன்பு கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்கு முன்பு கொடுக்க வேண்டும் என்றால் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சி.ஐ.டி.யு. மாநில உதவி தலைவர் சந்திரன், செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

----

மேலும் செய்திகள்