கிருஷ்ணாபுரம் அணை திறப்பு கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணை திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்ம பள்ளி என்ற இடத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது அணை நிரம்பியது. மேலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறையவில்லை. இதனால் அணையை திறந்து தண்ணீரை வெளியேற்ற ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இது குறித்து தமிழகத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா ஆலோசனையின் பேரில் நேற்று முன்தினம் இரவு வருவாய்த்துறையினர் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் ஆற்றில் நள்ளிரவுக்கு மேல் தரைப்பாலத்தை யாரும் கடக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் தரைப்பாலம் உள்ள பகுதிகளில் இருபுறமும் வருவாய்த்துறையினரும், போலீசாரும் இரவு முழுவதும் யாரும் இறங்காமல் கண்காணித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் கிருஷ்ணாபுரம் அணை திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த வெள்ளம் கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று பகுதிக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. இரவு 9 மணியளவில் திறக்கப்பட்ட கிருஷ்ணாபுரம் அணை நீர் அதிகாலை 3 மணியளவில் மூடப்பட்டது. இதனால் பள்ளிப்பட்டு தாலுகாவிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் உள்ள கீழ் கால் பட்டடை, சாமந்தாவாடா, நெடியம், சொரக்காய் பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களுக்கு மேல் இடுப்பளவு வெள்ளம் பாய்ந்து ஓடியது.
இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் யாரும் ஆற்றில் இறங்காமல் எச்சரிக்கையாக இருந்தனர். இதனால் அந்த பகுதி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் நேற்று அவதிப்பட்டனர்.