சொத்து பிரச்சினை: வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை - உறவுக்கார பெண் கைது

சொத்து பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் உறவுக்கார பெண் திட்டியதால் மனமுடைந்த தம்பதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-10-20 03:40 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை அம்பத்தூர் சோழபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 84). இவர் தனது மனைவி மாரியம்மாள் (74) மற்றும் மகன் யுவராஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் வசிக்கும் வீட்டின் வளாகத்தில் உள்ள மற்றொரு வீட்டில் இவர்களது உறவினர் சசிகலா (51) என்பவர் வசித்து வருகிறார்.

இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே சொத்து பிரச்சினை இருப்பதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஜானகிராமன் வீட்டின் கழிவுநீர் கால்வாயை சசிகலா அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் கழிவுநீர் வெளியேறவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஜானகிராமனும் சசிகலாவிடம் கேட்டுள்ளார்.

அப்போது ஜானகிராமன் தம்பதியை கேவலமாக பேசி சசிகலா திட்டியுள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்த ஜானகிராமனும் மாரியம்மாளும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் சென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டிற்குள் சென்று சோதனை செய்ததில், ஜானகிராமன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனது சாவுக்கு காரணம் சசிகலாதான் அவருக்கு சரியான தண்டனை வாங்கி தரும்படி கேட்டு கொள்கிறேன்’ என எழுதப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மூத்த தம்பதிகள் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்