ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: முதியவரை கடத்திய தம்பதி உள்பட 3 பேர் கைது
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த முதியவரை கடத்திய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 65). இவர் கீழ்கட்டளையில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவர் காரில் புழுதிவாக்கம் பறக்கும் ரெயில்வே நிலையம் அருகே வந்த போது, மற்றொரு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது.
இது குறித்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில், மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்க் -டி ரூபன், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் திருமால் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடினர்.
இந்த நிலையில், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே இருந்த சிவராமனை தனிப்படையினர் மீட்ட நிலையில், அங்கிருந்த 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். அதில், கடந்த 2018-ம் ஆண்டு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி விருதுநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.12 லட்சமும், திருத்தணியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் ரு.9 லட்சம் வரை மதுரையை சேர்ந்த சிவராமன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவராமனை கடத்தியதாக ராதாகிருஷ்ணன் (50), அவரது மனைவி லட்சுமி (39), கிருஷ்ணன் (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.