அண்ணனை கட்டையால் அடித்துக்கொன்ற தம்பி - மதுபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்
மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கட்டையால் அடித்துக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 67). இவரது மகன்கள் சிவராஜ் (47). பிரகாஷ் (44). சிவராஜ் ஐ.சி.எப்.பில் பணியாற்றி விட்டு விருப்ப ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வந்த சிவராஜ், தாயார் தனலட்சுமியிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாய் தனலட்சுமியின் சத்தம் கேட்டு வந்த பிரகாஷ், தகராறில் ஈடுபட்ட சிவராஜை கண்டித்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகிலிருந்த கட்டையால் சிவராஜை பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதுகுறித்து தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தார்.