பவானிசாகர் அருகே யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு

பவானிசாகர் அருகே யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-10-19 21:26 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அருகே யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மூதாட்டி
பவானிசாகர்அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி  ஓலக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). அவருடைய மனைவி துளசிமணி (68). இவர்கள் அந்த பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் அவ்வப்போது தங்கி வந்தனர்.
இந்த நிலையில் 3 நாட்களாக துளசிமணியை காணவில்லை. நேற்று முன்தினம் ஆறுமுகம் தோட்ட வழியாக சென்ற சிலர் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினார்கள்.
உடல் புதைப்பு
விசாரணையில் அவர், தனது மனைவி துளசிமணிக்கு கடந்த 10 ஆண்டு்களாக வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும், கடந்த 14-ந் தேதி ஆயுதபூஜை அன்று தோட்டத்தில் பூ பறித்து கொண்டிருந்தபோது வலிப்பு நோய் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும், விசேஷ நாளன்று யாரும் அடக்கம் செய்ய வரமாட்டார்கள் என்பதால் யாருக்கும் தெரியாமல் தானே தோட்டத்தில் குழி தோண்டி மனைவியின் உடலை புதைத்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து துளசிமணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கையாக மரணம் அடைந்தாரா? என்பதை கண்டுபிடிக்க நேற்று அவரது உடலை தோண்டி எடுத்து போலீசார் முடிவு செய்தனர்.
பிரேத பரிசோதனை
அதைத்தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ குழுவினர், பவானிசாகர் போலீசார், வருவாய்த்துறையினர் நேற்று மதியம் கணவர் ஆறுமுகத்துடன் துளசிமணி புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர். பின்னர் அந்த இடத்தை சுற்றி யாரும் உள்ளே வராதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பணியாளர்கள் துளசிமணி புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி அவரது உடலை வெளியே எடுத்தனர். அதன்பின்னர் டாக்டர்கள் துளசிமணியின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இது சுமார் 1 மணி நேரம் நடந்தது. அதன்பின்னர் உடலை அங்கேயே புதைத்துவிட்டு சென்றனர்.
பரிசோதனை முடிவு
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘துளசிமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடற்கூறுகள் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா? என்பது தெரியவரும்’ என்றனர்.
மூதாட்டி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்