50 பேர் கைது 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
கபிஸ்தலம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போலீசார் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போலீசார் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருவைக்காவூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சாலைமறியல்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் வைத்துள்ள கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என மற்றொரு சமூகத்தினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற கூறுவதை கண்டித்தும், கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்தும், திருவைக்காவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை, உள்ளிட்ட கிராம மக்கள் திருவைகாவூர் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து கடந்த 17-ந் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அமைதி பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் மறுநாள் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் அமைதி் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறினர். இதை ஏற்று சாலைமறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பயங்கர மோதல்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தாசில்தார் மதுசூதனன் தலைமையில் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் மாலை மீண்டும் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
4 போலீசார் உள்பட 12 பேர் காயம்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெலட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா, கபிஸ்தலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் 2 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் படுகாயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
50 பேர் கைது
இதனால் அங்கு பதற்றம் நிலவியதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் ரவளிப்பிரியா, சுகுணாசிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் இரவு முழுவதும் திருவைக்காவூர் கிராமத்தில் தங்கி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
144 தடை உத்தரவு
மேலும் திருவைக்காவூர் கிராமம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராமத்துக்குள் அனுமதி பெறாமல் யாரும் செல்லவும் முடியாது. கிராமத்தை விட்டு அனுமதி பெறாமல் யாரும் வெளியில் வரவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.