கோபி அருகே, அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை
கோபி அருகே அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கடத்தூர்
கோபி அருகே அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
காமாட்சி அம்மன் கோவில்
கோபி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அந்த பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். வழக்கம்போல் நேற்று காலை கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து உள்ளார்.
உண்டியல் காணிக்கை திருட்டு
அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை திருடப்பட்டிருந்தது.
உடனே இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்டதும் கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது இரவில் கோவிலை அடைத்து விட்டு பூசாரி சென்ற பின்னர் நள்ளிரவில் கோவில் பகுதிக்கு மர்ம நபர்கள் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த காணிக்கையையும் திருடி சென்றது, தெரியவந்தது.
பரபரப்பு
இதேபோல் கோபியை அடுத்த மொடச்சூர் வண்ண மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலையும் உடைத்து காணிக்கையை திருடி சென்று உள்ளனர்.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.