ராகுல் காந்தி குறித்து சர்ச்சை கருத்து; நளின்குமார் கட்டீலுக்கு காங். தலைவர்கள் கண்டனம்
ராகுல் காந்தி ஒரு போதைப்பொருள் வியாபாரி என்று நளின்குமார் கட்டீல் பேசிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
போதைப்பொருளுக்கு அடிமை
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், அவர் போதைப்பொருள் வியாபாரி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஆகியோர் சிறைக்கு சென்றார். அவர் சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றாரா?. இத்தகையவர்கள் பிரதமர் மோடி குறித்து தவறாக பேசுகிறார்கள்.
அரசியல் சாசனம்
காங்கிரசுக்கு அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார்?. கட்சி தலைவர் பதவிக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். குறித்து சித்தராமையா தவறாக பேசுகிறார். சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அந்த அமைப்பை குறை கூறுகிறார்.
இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அழைத்து செல்லும் பணியை மோடி செய்கிறார். அதை சித்தராமையா குறை சொல்கிறார். அடுத்து நடைபெற உள்ள மேல்-சபை தேர்தலிலும் பா.ஜனதாவே வெற்றி பெறும். காங்கிரசில் சித்தராமையா-டி.கே.சிவக்குமார் ஜோடி எருதுகள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றாது. ஆனால் அந்த கட்சி 2 ஆக உடைவது உறுதி.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.
கடும் கண்டனம்
ராகுல்காந்தி குறித்த நளின்குமார் கட்டீலின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சித்தராமையா, "நளின்குமார் கட்டீலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அதனால் அவர் நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். அவர் ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி" என்றார்.
மேலும் நளின்குமார் கட்டீல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.