கொரோனாவால் 430 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் 430 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் 430 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
முன்னுரிமை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன்படி தாய், தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், பெற்றோரில் தாய், தந்தை என ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த தொகை, மேலும் பெற்றோரை இழந்து பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச்செலவாக மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதோடு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் இந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.
பரிந்துரை
கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்ப சூழ்நிலை தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதா என அறியப்பட்டு விபரங்கள் அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து பாதுகாப்பாளர்கள் வசம் வசிக்கும் 10 குழந்தைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் நிதி உதவி பெற தகுதி உள்ளவர்கள். தாய் அல்லது தந்தையை இழந்த 421 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் நிதி உதவிக்காக விண்ணப்பம் பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 161 ஆகும். மதுரை மாவட்டத்தில் மட்டும் 431 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அதில் 170 பேர் நிதி உதவி பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் முதல்கட்டமாக பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகைக்கான பத்திரமும் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த 18 குழந்தைகளுக்கு தனித்தனியாக ரூ.3 லட்சமும் என மொத்தம் 19 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.59 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கி உள்ளார்கள்.
வைப்பு தொகை
இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைந்த குழந்தைகளின் தாயார் ஸ்ரீதேவி கூறியதாவது:-
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எனது கணவர் கொரோனா நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இரண்டு பெண் குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல் மிகுந்த சிரமமான சூழ்நிலையில் இருந்தபோது முதல்-அமைச்சர் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் நிதி வழங்கி உள்ளார்கள். அதனை அவர்களுடைய வங்கி கணக்கில் எதிர்கால நலன் கருதி வைப்புத்தொகையாக சேமித்துள்ளேன். எனது குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாரத்திற்கும், பாதுகாப்புடன் வளர்ப்பதற்கும் மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.