பள்ளி மாணவி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
காதலுக்கு உதவி செய்யாததால் தாக்கப்பட்ட பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
தந்தை-மகள் மீது தாக்குதல்
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகள் பூஜா(வயது 17). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபர், அவருடைய காதலுக்கு உதவி செய்யுமாறு கேட்டு பூஜாவிற்கு குறுந்தகவல் அனுப்பியும், பின்னர் நேரிலும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த வேலாயுதம், கடந்த மாதம் இது குறித்து கேட்டபோது அந்த வாலிபர், அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 10 பேர் சேர்ந்து வேலாயுதத்தையும், பூஜாவையும் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வேலாயுதம் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பூஜா அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்கொலை
இச்சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றதாகவும், வழக்குப்பதிவு செய்ததாகவும், ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பூஜா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பூஜாவை, அந்த வாலிபர் உள்ளிட்டோர் கேலி, கிண்டல் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பூஜா நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாலை மறியல்
இது குறித்து கயர்லாபாத் போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பூஜாவின் தற்கொலைக்கு போலீசாரின் அலட்சியம் தான் காரணம் என்றும், அவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி அரியலூர் அண்ணா சிலை அருகில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பாதுகாப்புடன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கைது
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு கோபிநாத் மற்றும் கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி, தனுஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.