தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.;
மதுரை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
கூடுதல் கட்டணம்
சென்னையில் இருந்து விமானம் மூலம், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுபோல், தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட இருக்கிறது. முதல்-அமைச்சர் உத்தரவுபடி தனியார் பஸ்களுக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து முறையான புகார்கள் வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார் செய்ய வேண்டும். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.
ேகமரா பொருத்தும் பணி
அரசு பஸ்களில் கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது சென்னையில் நடைபெறுகிறது. முதற்கட்டமாக அரசு பஸ்களில் 2900 எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படிப்படியாக தமிழகம் முழுவதும் அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.