சதுப்பேரி ஏரியில் இருந்து வீணாக செல்லும் தண்ணீர்

மதகு உடைந்துள்ளதால் சதுப்பேரி ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-19 18:49 GMT
வேலூர்

மதகு உடைந்துள்ளதால் சதுப்பேரி ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மதகுபகுதியில் உடைப்பு

வேலூர் மாநகராட்சியில் சதுப்பேரி ஏரி முக்கிய நீர் ஆதாரமாக திகழ்க்கிறது. பரந்து விரிந்து காணப்படும் ஏரி மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த ஏரிக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் செல்கிறது. தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாலாற்றில் இருந்து சதுப்பேரி ஏரிக்கு நீர்வரத்து உள்ளதால் சதுப்பேரி ஏரி நிரம்பி உள்ளது. இந்தநிலையில் சதுப்பேரி ஏரியில் உபரி நீர் வெளியேறும் பகுதியின் அருகே உள்ள மதகு பகுதி உடைந்துள்ளது. எனவே அதிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

பல ஆண்டு கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சதுப்பேரி ஏரி நிரம்பும். ஆனால் ஏரியின் உள்பகுதியில் உள்ள மதகு பகுதி உடைந்துள்ளதால் அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி விடுகிறது. இதனால் ஏரியில் தண்ணீர் வந்த சில நாட்களிலேயே குறைந்து விடுகிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் சதுப்பேரி ஏரி முழுவதும் தண்ணீர் காணப்படுகிறது. இதனால் மதகு பகுதியில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. மதகு பகுதியை சரிசெய்ய பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோடை காலங்களில் விவசாய நிலங்களுக்கும் பயன்இல்லை, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடைந்து காணப்படும் மதகு பகுதியை சரிசெய்ய வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்