காதல் திருமண செய்த புதுப்பெண் தற்கொலை
ஜெகதாபியில் காதல் திருமண செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளியணை
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசமூர்த்தி-வனிதா தம்பதியின் மகன் சதீஷ்குமார் (வயது 22). அதே ஊரை சேர்ந்த முருகேசன்-தனலட்சுமி தம்பதியின் மகள் பவித்ரா (21). உறவினர்களான சதீஷ்குமாரும், பவித்ராவும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்பு சதீஷ்குமார் வீட்டில் வசித்து வந்த பவித்ரா, கரூரில் உள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். இதேபோல் சதீஷ்குமாரும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இளம்பெண் தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கரூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய பவித்ரா இரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். அதற்குப்பின் வேலை முடிந்து சதீஷ்குமார் வீட்டுக்கு வந்தபோது அறையில் உள்ள விட்டத்தில் பவித்ரா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலின்பேரில், வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ராவை மீட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதனையடுத்து பவித்ராவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரா என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.