தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-19 17:11 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள் 
பழனி 13-வது வார்டு பொன்காளியம்மன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில், அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும். -சுப்புராஜ், பழனி.
குப்பை குவியல் 
தேனி 22-வது வார்டு பவர்அவுஸ் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே, குப்பைகளை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். 
-நாகதேவி, தேனி.
மின்தடையால் மக்கள் அவதி 
பழனி அருகே சிவகிரிபட்டி எம்.ஜி.ஆர்.நகர், திருநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினமும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் படிக்க முடியவில்லை. பெண்கள் வீட்டு வேலைகளை செய்ய முடியவில்லை. எனவே, மின்தடை ஏற்படாமல் சீராக மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பாலசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்.நகர்.
சேதம் அடைந்த சாலை 
திண்டுக்கல் நாகல்நகரில் ரெயில் நிலையம் செல்லும் சாலை சேதம் அடைந்து பள்ளம் உருவாகிவிட்டது. சாரல் மழைக்கே மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம் தெரியாமல் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். இதனை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
-ராஜேஸ்கண்ணன், திண்டுக்கல்.
குடிநீர் தட்டுப்பாடு
உத்தமபாளையத்தில் கோட்டைமேடு பகுதியில் கடந்த சிலநாட்களாக முறையாக குடிநீர் வருவதில்லை. மேலும் தெரு குழாய்க்கான மின்மோட்டாரும் பழுதாகி விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தினமும் குடிநீர் கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பக்ருதீன், உத்தமபாளையம்.
குண்டும், குழியுமான சாலை 
போடி மேலசொக்கநாதபுரத்தில் பாதாள சாக்கடை பணியால் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மழைக்காலத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. இதை தடுக்க சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-பிரகாஷ், போடி.

மேலும் செய்திகள்