சாலையில் கவிழ்ந்த கார் மீது இன்னொரு கார் மோதியது சிறுமி உள்பட 2 பேர் பலி பர்கூர் அருகே விபத்து

பர்கூர் அருகே சாலையில் கவிழ்ந்த கார் மீது இன்னொரு கார் மோதியது. இதில் சிறுமி உள்பட 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-10-19 17:09 GMT
பர்கூர்:
பர்கூர் அருகே சாலையில் கவிழ்ந்த கார் மீது இன்னொரு கார் மோதியது. இதில் சிறுமி உள்பட 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெங்களூருவை சேர்ந்தவர்கள் 
கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி அபர்ணா (39). இவர்களுக்கு அகான்ஷா (17), அக்சரா (10) என்ற 2 மகள்கள் இருந்தனர். அனில்குமார் தனது குடும்பத்தினர் மற்றும் உறவுக்கார பெண் ரம்யா (33) ஆகியோருடன் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டனர். காரை அனில்குமார் ஓட்டினார்.
அந்த கார் நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பகுதியில் தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. சாலையின் நடுவில் இருந்த சுவரை இடித்துக்கொண்டு எதிர் திசையில் பாய்ந்தது. எதிர்திசையிலும் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
2 பேர் பலி 
அப்போது எதிரே வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்து கிடந்த கார் மீது மோதியது. சினிமாவில் போல் மின்னல் வேகத்தில் இந்த விபத்து நடந்து முடிந்தது. இதில் கவிழ்ந்து கிடந்த காரில் இருந்த அனில்குமாரின் மகள் அக்சரா, உறவுக்கார பெண் ரம்யா இருவரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானார்கள்.
அனில்குமார், அவருடைய மனைவி, இன்னொரு மகள் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இன்னொரு காரில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கந்திகுப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
5 பேருக்கு சிகிச்சை 
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான 2 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 கார்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் சிக்கிய இன்னொரு கார் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்தது என்பது தெரிய வந்தது. மேலும் காரில் இருந்த 2 பேரும், பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த பிரபாகர் (52), ராஜா (52) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்