போச்சம்பள்ளி அரசு பள்ளி வளாகத்தில் பரிதாபம் தண்ணீர் டேங்க் மீது கார் மோதி ஆசிரியை சாவு
போச்சம்பள்ளி அரசு பள்ளி வளாகத்தில் தண்ணீர் டேங்க் மீது கார் மோதியதில் ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.;
மத்தூர்:
போச்சம்பள்ளி அரசு பள்ளி வளாகத்தில் தண்ணீர் டேங்க் மீது கார் மோதியதில் ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பள்ளி ஆசிரியை
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). இவர் கும்பகோணத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமராவதி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தர்மபுரியில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
முதுகலை பட்டதாரியான அமராவதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அமராவதிக்கு கார் சரியாக ஓட்ட தெரியாததால் தினமும் உறவினர் ஒருவர் அவரை பள்ளிக்கு காரில் அழைத்து வந்தார்.
காரை ஓட்ட முயன்றார்
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அமராவதி உறவினருடன் காரில் பள்ளிக்கு வந்தார். பின்னர் உறவினர் காரை பள்ளி வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்றார். மாலை அவர் வர சற்று தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் அமராவதி பள்ளி வளாகத்தில் இருந்து காரை வெளியே ஓட்டி செல்ல முயன்றார். அப்போது பள்ளியின் முன்புற வாசல் அருகில் வந்த போது பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அவர் மிதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கார் வேகமாக சென்று அங்கிருந்த தண்ணீர் டேங்க் மீது மோதியது. இதில் அமராவதி பலத்த காயம் அடைந்தார். மேலும் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதைக்கண்ட சக ஆசிரியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
பின்னர் அமராவதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விபத்து போச்சம்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.