குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
துடியலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
துடியலூர்
துடியலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளிடம் புகார்
கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள முத்து நகரில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் செய்து உள்ளனர்.
இருந்தபோதிலும் அவர்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
சாலை மறியல்
இதையடுத்து ஆத்திரம் அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் துடியலூர்-சரவணம்பட்டி சாலையில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க இணை செயலாளர் மாணிக்கம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.