கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் போலீசார் நியமனம்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-19 16:33 GMT
திண்டுக்கல்:
 ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர். இதில் வெளிமாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் கார்கள், வேன்களில் சுற்றுலா வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கொடைக்கானலில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க வாகனங்களில் செல்வதே வசதியாக இருக்கும். இதுவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதற்கு காரணமாக உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒருசில நாட்களில் நெரிசலால் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணலாம். இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சிரமப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த கூடுதல் போலீசாரை நியமித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் கூடுதலாக ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், 5 போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீஸ்காரர்கள், 20 ஆயுதப்படை போலீஸ்காரர்கள், 20 சிறப்பு காவல்படையினர் பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் செய்திகள்