கடலூர் மாவட்டத்தில் 9 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கடலூர் மாவட்டத்தில் 9 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. அவர்கள் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-10-19 16:04 GMT
கடலூர், 

கொரோனா

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அடித்து வருகிறது. ஆனால் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.

5 பேருக்கு டெங்கு காய்ச்சல்

மேலும் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு நாள் ஒன்றுக்கு 1500 நோயாளிகள் வரும் நிலையில், அதில் 150 பேர் காய்ச்சால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி நேற்று 50 பேர் காய்ச்சலால் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ததில், 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. அதில் பண்ருட்டியை சேர்ந்த 9 வயது ஆண் குழந்தை, தோட்டப்பட்டை சேர்ந்த 48 வயது பெண், பண்ருட்டியை சேர்ந்த 25 வயது வாலிபர், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, காரைக்காட்டை சேர்ந்த 28 வயது வாலிபர் என 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

தீவிர சிகிச்சை

இதையடுத்து அவர்கள் அங்குள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல் வராமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் மூலமாக காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வீட்டுக்கு அருகில் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருந்து எடுத்துக்கொள்ளாமல் டாக்டர்கள் ஆலோசனையை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்