குடிநீர் வழங்கக்கோரி 2 இடங்களில் சாலை மறியல்
திருவண்ணாமலை நகரில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகரில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் வசிக்கும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் தேவைகளை நகராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்கிறது.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலை பகுதி மற்றும் அவலூர்பேட்டை சாலை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை காந்திநகர் பைபாஸ் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
காந்திநகர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மறியலில் ஒரு சில தி.மு.க. தொண்டர்கள் கைகளில் தி.மு.க. கொடியுடன் வந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதிகளில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சாலை மறியிலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் சாலை மறியலால் காந்திநகர் பிரதான சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.