திருச்செந்தூர் கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு
திருச்செந்தூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு மீட்கப்பட்டு பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்டது
திருச்செந்தூர்;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று மாலையில் சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் கால்நடை உதவி டாக்டர் பொன்ராஜ் பிரேத பரிசோதனை செய்த பின்னர், கடல்பசு கடற்கரையில் புதைக்கப்பட்டது.
இந்த கடல் பசுக்கள் பெரும்பாலும் ஆழ்கடலில் தெளிந்த நீரோட்டம் உள்ள இடங்களில் வாழ்ந்து வருகின்றன. மாசு கலந்த பகுதிக்கு கடல் பசுக்கள் செல்வது இல்லை. உயிரிழந்த இந்த கடல் பசு வழி தவறி கரையோரம் வந்ததால் பார்வை இழந்து பாறையில் அடிபட்டு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.