உத்தமபாளையத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி மாவட்ட ஊராட்சி செயலர் சங்க செயலாளர் சுந்தரபாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் சார்நிலை கருவூலங்கள் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊராட்சி செயலர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் முன்களபணியாளராக பணியாற்றி மரணமடைந்த ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.