ஏரல் அருகே கொற்கையில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ளப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஏரல் அருகே கொற்கையில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

Update: 2021-10-19 14:53 GMT
ஏரல்:
ஏரல் அருகே கொற்கையில் கடல்சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அகழாய்வு பொருட்கள்
தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் தொடர்ந்து 8 மாதங்கள் நடந்தன.
இதில் 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கு அறுக்கும் தொழில்கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ண பாசிமணிகள், பானைகள், சுடுமண் உருவபொம்மைகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது அகழாய்வு பணிகளில் கிடைத்த 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், இரண்டடுக்கு கொள்கலன் போன்றவற்றை பார்வையிட்டார்.
ஆய்வுகள் குறித்து அகழாய்வு இயக்குனர் தங்கதுரை, தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, காளிஸ்வரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதன்பின்னர் அகழாய்வு பணியில் கண்டெடுத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததை அமைச்சர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் உடன் இருந்தார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர் வரலாறு, பண்பாட்டிலும் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தை கொடுக்கக்கூடிய இடமாக இந்த கொற்கை அமைந்துள்ளது. தற்போது நடந்துள்ள அகழாய்வுகள் மூலம் பல முக்கிய பொருட்கள் வெளியில் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்த அகழாய்வு மூலமாக கொற்கைக்கும், வெளிநாடுகளுக்கும் வாணிபத்தொடர்பு இருந்தது உறுதியாகிறது.
கடல்சார் ஆய்வு
கொற்கையில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ள பல நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த அகழாய்வு பணிகளுக்கு சிறந்த தொழில்நுட்ப வசதி தேவையாக இருக்கிறது. இதற்காக உரிய ஆலோசனைகளும், ஆய்வுகளும் தொடர்ந்து செய்து வருகிறோம். அதற்காக உரிய வல்லுநர்களுடன் நமது குழு தொடர்ந்து கலந்து ஆலோசித்து வருகிறது.
அதன்பின்னர் சரியான நேரத்தில் கொற்கையில் கடல்சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். கொற்கையில் அதிக அளவில் வீடுகள் இருப்பதால் அகழாய்வு பணிகளில் சிரமம் ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றின் பகுதியில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகம் மிக பிரமாண்டமாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவகளை
பின்னர் சிவகளையில் நடந்த அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அகழாய்வு இயக்குனர் பிரபாகர், தொல்லியல் துறை அலுவலர் பரத், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன், சிவகளை விவசாய சங்க தலைவர் மதிவாணன், வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், பஞ்சாயத்து செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---------------

மேலும் செய்திகள்