மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? அதிகாரி விளக்கம்

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-10-19 14:40 GMT
கடலூர், 

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

படைப்புழு தாக்குதல்

கடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் வட்டாரங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளத்தில் அமெரிக்க படைப்புழு தாக்குதல் இளம் பயிரில் சராசரியாக 20 முதல் 35 சதவீதமும், வளர்ந்த பயிரில் 25 முதல் 35 சதவீதமும், இளம் கதிர் மற்றும் கதிர் முற்றும் பருவத்தில் 10 முதல் 20 சதவீதமும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த படைப்புழுக்கள் மக்காச்சோள பயிரில், விதைத்த 10 நாள் முதல் குருத்து மற்றும் இலை உறைகளில் சேதத்தை விளைவிக்கின்றன. புழுக்களின் தாக்கத்தால் வெளிவரும் தளிர்களில் வரிசையாகவும், சிறிய மற்றும் நீள் வட்டவடிவிலும், சில இடங்களில் வடிவமற்ற துளைகளாகவும் காணப்படுகிறது. இப்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் இலைகள் மேல் பாகம் சேதமாகியும், சில இடங்களில் இலைகள் மடிந்தும் காணப்படும்.

வாழ்க்கை சுழற்சி

இப்புழுக்கள் தண்டுப்பகுதியை துளைக்காமல், கதிர்களில் நுனி முதல் காம்பு பகுதி வரை சேதப்படுத்தும். படைப்புழுவின் வாழ்க்கை சுழற்சியானது முட்டை புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி ஆகிய பருவங்களை கொண்டது. ஒரு தாய் அந்துப்பூச்சி 1500 முதல் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். வெண்ணிற அல்லது பழுப்பு நிற உரோமத்தால் மூடின முட்டைகளில் இருந்து 2-3 நாட்களில் புழுக்கள் வெளிவருகின்றன.
அதனால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதுடன், சயன்ட்ரனிலிப்ரோல் 19.8 சதவீதம் மற்றும் தையோமெத்தாக்சம் 19.8 சதவீதம் என்ற மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி வீதம் விதை நேர்த்தி செய்து விதைத்தல் வேண்டும்.

இனகவர்ச்சி பொறி

மேலும் வரப்பு பயிர் சாகுபடியாக தட்டை பயறு, எள், சூரியகாந்தி அல்லது துவரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இறவை நிலத்திலும், தீவன சோளப்பயிரை மானாவாரி நிலத்திலும் பயிர் செய்தல், ஏக்கருக்கு 5 இனகவர்ச்சி பொறி வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம். இப்புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் குளோரான்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீத திரவம் 4 மி.லி., இமாமக்டின் பென்சோயேட் 5 சத திரவம் 4 மி.லி. அல்லது கதிர் பிடிக்கும் பருவத்தில் ஸ்பைனிடோரம் 17.7சதவீத திரவம் 5 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இந்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை விவசாயிகள் தவறாமல் பின்பற்றி, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திடலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்