ஊட்டியில் 185 டன் குப்பைகள் அகற்றம்
ஊட்டியில் கடந்த 4 நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் குவிந்த 185 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் கடந்த 4 நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் குவிந்த 185 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
நகராட்சி மார்க்கெட்
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. வழக்கமாக ஊட்டியில் தினமும் 30 டன் குப்பைகள் சேகரமாகி வருகிறது. இதில் 9 டன் நகராட்சி மார்க்கெட்டில் இருந்து அகற்றப்படும்.
அங்கு லாரி மூலம் குப்பைகளை அப்புறபடுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் வார்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படுகிறது. தொடர்ந்து தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகின்றன.
துர்நாற்றம்
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் தொடர் விடுமுறையையொட்டி 4 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதன் காரணமாக ஊட்டியில் குப்பைகள் குவிந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சேகரமான குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் காய்கறி, பழக்கழிவுகள் குவிந்து கிடந்தது. இதனால் தூர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று மார்க்கெட்டில் குவிந்து கிடந்த குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் நகராட்சி லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது. ஊட்டி நகராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பைகளை விட தற்போது அதிகமாக சேகரிக்கப்பட்டு உள்ளது.
185 டன் குப்பைகள்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சியில் கடந்த 14-ந் தேதி 30 ஆயிரத்து 800 கிலோ, 15-ந் தேதி 43 ஆயிரத்து 20 கிலோ, 16-ந் தேதி 48 ஆயிரத்து 890 கிலோ, 17-ந் தேதி 27 ஆயிரத்து 180 கிலோ, 18-ந் தேதி 38 ஆயிரத்து 530 கிலோ என மொத்தம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 420 கிலோ (185 டன்) குப்பைகள் சேகரமானது.
அவற்றை பணியாளர்கள் அகற்றி தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று கொட்டினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டியில் குப்பைகள் அதிகமாக சேகரமாகி உள்ளது.
இ்வ்வாறு அவர்கள் கூறினார்கள்.