அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டுயானை

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் பீதி அடைந்தனர்.

Update: 2021-10-19 14:02 GMT
கோத்தகிரி

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் பீதி அடைந்தனர்.

அரசு பஸ்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழ விளைச்சல் அதிகரித்து உள்ளது. இந்த பலாப்பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் படையெடுத்து வருக்கின்றன. அவை அவ்வப்போது தனியாகவும், கூட்டமாகவும் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வருகின்றன.

இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்தகிரிக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 16 பயணிகள் இருந்தனர். 

கண்ணாடியை உடைத்தது

கீழ்தட்டப்பள்ளம் அருகே சாலையின் குறுக்கே ஆண் காட்டுயானை ஒன்று வந்தது. உடனே சற்று தொலைவிலேயே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் திடீரென மிரண்ட காட்டுயானை பஸ்சை நோக்கி ஓடி வந்து முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் குத்தி உடைத்தது. இதனால் பயணிகள் பீதி அடைந்து பயத்தில் அலறினர். மேலும் பஸ்சில் உள்ள இருக்கைகளுக்கு இடையே மறைவாக பதுங்கி கொண்டனர்.

தொடர்ந்து சிறிது நேரம் பஸ்சை காட்டுயானை சுற்றி வந்தது. அதன்பிறகு அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக கோத்தகிரி கிளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் அட்டகாசம்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக வரும் வாகனங்களை தாக்கி வருகின்றன. எனவே உயர் சேதம் ஏற்படும் முன்பாக காட்டுயானைகள் சாலைக்கு வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சம்பவம் குறித்து அரசு போக்குவரத்துக்கழக கோத்தகிரி கிளை மற்றும் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் அரசு பஸ்சின் கண்ணாடியை காட்டுயானை உடைத்தது. தற்போது மீண்டும் அட்டகாசம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்