விநாயகன் யானையை பிடிக்காவிட்டால் போராட்டம்

வீடுகளை உடைத்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் விநாயகன் யானையை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்ரீமதுரை ஊராட்சி மக்கள் அறிவித்து உள்ளனர்.

Update: 2021-10-19 14:02 GMT
கூடலூர்

வீடுகளை உடைத்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் விநாயகன் யானையை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்ரீமதுரை ஊராட்சி மக்கள் அறிவித்து உள்ளனர்.

விநாயகன் யானை

கோவையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த விநாயகன் என்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர். இதற்கு மசினகுடி, ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

அப்போது அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து, ஊருக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். ஆனால் விநாயகன் யானை  தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

வீட்டை உடைத்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதிக்குள் விநாயகன் யானை புகுந்தது. தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த லீலா என்ற பெண் தொழிலாளி வீட்டை உடைத்து அட்டகாசம் செய்தது. 

அப்போது வீட்டில் இருந்த லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் அலறினர். உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு ஓடி வந்து, யானையை விரட்டியடித்தனர். இருப்பினும் வீடு பலத்த சேதம் அடைந்தது. மேலும் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் தளவாட பொருட்கள் நாசமானது.

போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது தொடர்ந்து வீடுகளை உடைத்து வரும் விநாயகன் யானையால் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும், உடனடியாக அதனை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்