தக்காளி, வெங்காயம் விலை உயர்வு
தொடர் மழையால் வரத்து குறைந்ததால் ஊட்டியில் தக்காளி, வெங்காயம் விலை உயர்ர்ந்து உள்ளது.
ஊட்டி
தொடர் மழையால் வரத்து குறைந்ததால் ஊட்டியில் தக்காளி, வெங்காயம் விலை உயர்ர்ந்து உள்ளது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக விளைநிலங்களில் மண் ஈரப்பதமாக உள்ளது. இதனால் காய்கறிகளை அறுவடை செய்யும் பணி சரிவர நடைபெறவில்லை.
தொடர் மழையால் காய்கறிகள் அழுகும் அபாயம் இருக்கிறது. மேலும் சமவெளிப் பகுதிகளிலும் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரிக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.
2 மடங்கு உயர்வு
கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவைகள் தினமும் விற்பனைக்கு லாரிகளில் கொண்டு வரப்படும். தொடர் மழையால் 2 நாட்களுக்கு ஒருமுறை விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளி, வெங்காயம் விலை 2 மடங்காக உயர்ந்து உள்ளது.
சமையலுக்கு அத்தியாவசிய தேவையான வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் அளவை குறைத்து உள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகள் விலை மேலும் உயரும் அபாயம் இருக்கிறது.
தக்காளி கிலோ ரூ.50
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
தொடர் மழை காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ கேரட் மற்றும் பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50 வரை, முட்டைகோஸ் ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.30, வெண்டைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.40, பூண்டு ரூ.80 முதல் ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது. தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.