தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒருநபர் ஆணையம் இன்று தாசில்தார மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்துகிறது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் இன்று தாசில்தார மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்துகிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாசில்தார்கள், டாக்டர்களிடம் இன்று (புதன்கிழமை) முதல் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே 30 கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 962 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
31வது கட்ட விசாரணை
இதைத்தொடர்ந்து 31வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த தாசில்தார்கள் உள்பட மொத்தம் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணை வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.